மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் நடை ரோந்து பணி; காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் தீவிர காவல் நடை ரோந்து பணிகள் மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
காவல் நிலைய அதிகாரி முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை, அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பொதுமக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களது குறைகள் மற்றும் பிரச்னைகளை அறிதல், நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிதல், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்து எச்சரித்தல் மற்றும் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவை ஆகும்.

இந்த காவல் நடை ரோந்து பணிகளின் மூலம், மூத்த காவல் அதிகாரிகள் குற்றம் நடைபெறும் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வுசெய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற்று, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், உள்ளூர் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவும்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த காவல் நடை ரோந்துப் பணிகளுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது. இத்தகைய காவல் நடை ரோந்துப் பணிகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என மாநில காவல்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் காவல் களப்பணியை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுடனான தொடர்பை மேம்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: