விஜய்யின் வண்டவாளத்தை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்

கோவில்பட்டி, ஜூன் 6: தவெக ரியல் மற்றும் ரீல்ஸ் எல்லாம் பொய் செய்திகளாக பரப்பி வருகின்றனர். விஜய்யின் வண்டவாளம், தண்டவாளத்தில் ஏறும். விரைவில் மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கூறினார். கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவெக அரசு கால அவகாசம் கேட்பது நகைச்சுவைக்குரிய விஷயமாக தெரிகிறது. முதல்வராக இருக்கும் விஜய் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. ஆனால் அவர்களால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகமான வன்முறை நிகழ்கிறது. நிறைய இடங்களில் தவெக நிர்வாகிகளே குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அதைக் கூட தட்டிக்கேட்க முடியவில்லை.

டீக்கடைக்காரரிடம் காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்வது, வைகுண்டத்தில் தவெக பெண் ஆதரவாளரே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாத், மதன்ராஜா என்ற இரு அமைச்சர்கள் இருக்கின்றனர். இதைப் பற்றி யாரும் கேட்கவில்லை. தொகுதி மாறி போய் அமைச்சர் நாத், புன்னக்காயலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். அப்படியென்றால் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்? என்று யோசிக்க வேண்டும். தனது தொகுதி எது என்றே தெரியாத நிலையில் இருக்கின்றனர். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் போன்றே முதல்வர் விஜய் பேசினார். அதேபோன்று எழுதிய ஸ்கிரிப்ட், அதே உணர்ச்சி, அதே நடிப்புடன் பேசினார். அதையெல்லாம் ஊரறியும் உலகறியும். விஜய் சகஜ நிலைக்கு வர வேண்டும். தமிழக மக்களை கட்டிக் காக்க வேண்டும். தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டும். வந்தே மாதரம் தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கட்டாயமாக அதை பாட வேண்டும் என்று கூறவில்லை என கேரள முதல்வர் கூறுகிறார். அதை ஏன் உங்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதற்குப் போய் (பிரதமர் நரேந்திர மோடியிடம்) மனு கொடுத்தேன் என்கிறார். எதைக் குறை சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் முதல்வர் ஆறு மாத காலம் அவகாசம் கேட்கிறார். அதற்காக நடக்கின்ற கொள்ளைகளையும், கொலைகளையும், பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளையும் நம்மால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. வலிமையான எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தவெக அரசின் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் கடமை என்பதால் சுட்டிக்காட்டி வருகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கர் கீழே உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி, 5 ஏக்கர் மேலே உள்ளவர்களுக்கு பாதி தள்ளுபடி என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இன்றைக்கு 5 ஏக்கர் ரூ.50,000 ஆக மாறிவிட்டது. 80% பேர் பயன்பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர். தவெகவின் ரியல் மற்றும் ரீல்ஸ் எல்லாம் பொய் செய்திகளாகவே பரப்பி வருகின்றனர். இதுதான் உண்மை. விரைவில் விஜய்யின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும். மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள்’ என்றார்.

 

Related Stories: