சாத்தான்குளம் அருகே கிராமங்களுக்கு விநியோகித்த தண்ணீரில் துர்நாற்றம்

சாத்தான்குளம், ஜூன் 6: சாத்தான்குளம் அருகே கிராமங்களுக்கு விநியோகித்த தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் கிணற்றை சோதனையிட்டபோது அதில் ஆடு இறந்து கிடந்தது. அதனை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சிக்குட்பட்ட கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் கருமேனி ஆற்றங்கரையோரம் கிணறு உள்ளது. இதிலிருந்து இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு முத்துக் கிருஷ்ணாபுரம், வள்ளியம்மாள்புரம், ஆலடித்தட்டு பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரையே இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விநியோகிக்கப்பட்ட குடிநீரில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிநீர் ஆப்ரேட்டர், அந்த கிணற்றில் சென்று பார்த்தபோது ஆடு தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. இத்தகவல் காட்டுத்தீயாக பரவியதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறந்து கிடந்த ஆட்டை அப்புறப்படுத்தினர்.

Related Stories: