முதலூர் வழியாக இயக்கப்பட்ட திசையன்விளை -சாத்தான்குளம் அரசு பேருந்து திடீர் நிறுத்தம்

சாத்தான்குளம், ஜூன் 6:சாத்தான்குளத்தில் இருந்து தஞ்சை நகரம் வழியாக திசையன்விளைக்கு அரசு பேருந்து தடம் எண் 165சி காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு திசையன்விளை சென்று மீண்டும் இடைச்சிவிளை, நடுவக்குறிச்சி, போலையார்புரம், பொத்தகாலன்விளை, முதலூர் வழியாக சாத்தான்குளம் வந்தடையும். பின்னர் 6.50 மணிக்கு சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் மாலை நேரத்திலும் இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் முதலூர் உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த பேருந்து, சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்வது நிறுத்தப்பட்டு காலையில் திருச்செந்தூர் மார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து மீண்டும் சாத்தான்குளம் வந்து மதியம் ஆழ்வார்திருநகரிக்கும், மாலையில் சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடிக்கும் இயக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளைக்கு முதலூர் வழியாக சென்ற அரசு பேருந்து, கிராம பகுதிகளுக்கு செல்லாமல் கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளதால் இந்த பேருந்தை எதிர்பார்த்து பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்து உள்ளனர். காலை மற்றும் மாலை நேரத்தில் இந்தப் பேருந்து கிராமப்புற வழியாக இயக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், முதலூர் உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து காலை, மற்றும் மாலை நேரத்தில் சாத்தான்குளம் பகுதிக்கு வந்து செல்ல இந்த பேருந்து பெரும் உதவியாக இருந்தது. நாகர்கோவில் பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு சாத்தான்குளம் வழியாக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்கப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளது. எனவே முதலூர் வழியாக இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண் 165சி-யை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: