ஜல்ஜீவன் மிஷன் 2.0 திட்டம் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு- ஒன்றிய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: விஜய் கையெழுத்திட்டார்

சென்னை: ஜல்ஜீவன் மிஷன் 2.0 திட்டம் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு- ஒன்றிய அரசிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். டெல்லியில் ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் விஜய் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். கூட்டத்தில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் முதற்கட்டமாக 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது ஒன்றிய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 லட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் 21,258 ஒற்றை கிராம திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட உயிர் நீர் இயக்கத் திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.18,123.05 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.9,025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும். உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டதன் மூலம், ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும்.

உயிர் நீர் இயக்க (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்வதில் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் டெல்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிய ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா, ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் அசோக் கே.கே. மீனா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்புச் செயலாளர் கணேஷ், உயிர் நீர் இயக்கத் திட்ட இயக்குநர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: