அருமனை, ஜூன் 3: அருமனை அருகே நேற்று காலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது தனியாக பிரிந்து சென்ற யானை தொழிலாளி முதுகில் தந்தத்தால் குத்தியதில் அவர் பரிதாபமாக இறந்தார். குமரி மாவட்டம் அருமனை அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்கு உள்பட்ட மருதம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டங்கள், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை சுமார் 6.30 மணி அளவில் காட்டில் இருந்து இறங்கிய 3 யானைகள் ரப்பர் தோட்டத்தின் கேட்டை உடைத்து குடியிருப்புக்குள் புகுந்தன. இதை அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாஹின் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து கிராம மக்களுக்கு யானை கூட்டம் குறித்து தகவல் கொடுத்தார். உடனே உஷாரான கிராம மக்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானை கூட்டம் கருமலை அடித்தோட்டம் குடியிருப்பு பகுதியை சுற்றியே வலம் வந்தன. இதனால் பயந்துபோன மக்கள் பின் வாங்கினர். பின்னர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனசரகர் முகைதீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசுகள் வெடித்து யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் 3 திசைகளுக்கு பிரிந்து சென்று விட்டன.
இதில் ஒரு யானை வட்டப்பாறை பகுதியில் புகுந்தது. நேற்று மாலை அப்பகுதியில் சுற்றி வந்த யானை வட்டப்பாறை வெள்ளறக்கு பகுதியை சேர்ந்த மதபோதகரான ராஜேஷ்(46) என்பவரை துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க ராஜேஷ் ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை ராஜேஷின் முதுகில் தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிரவின் எம்எம்ஏ குழித்துறை அரசு மருத்துவமனைக்கு வந்து ராஜேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். யானை தாக்கி மதபோதகர் இறந்த சம்பவம் வட்டப்பாறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அன்பு, பிரவின் எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு சென்றனர்.
