புதுடெல்லி: குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் விதிகள் 2025ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஒன்றிய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை ஒன்றிய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த விதிகள், குறிப்பிட்ட வெளிநாட்டு விசா வைத்திருப்பவர்களுக்கான பதிவுக் காலக்கெடு, வெளிநாட்டு பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளின் தகவல் தெரிவிக்கும் கடமைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கான தகவல் பகிர்வு தேவைகள் ஆகியவற்றை மாற்றியமைக்கின்றன.
180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு செல்லுபடியாகும் விசாவில் இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டினர், அந்தக் காலத்திற்கு மேல் தங்க விரும்பினால், 180 நாள் காலக்கெடு முடிவடைவதற்குள் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். முந்தைய விதிமுறையின்படி, 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென்பது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதியின்படி, அவசர சூழ்நிலைகளில் மட்டுமே நீண்ட காலம் தங்குவதற்கான பதிவு வழங்கப்படும். அறிவிக்கப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் விதிகள், 2025ன் கீழ், இந்த மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வருகிறது.
பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே வெளிநாட்டினராக இருக்கும் தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குச் சிறிய அளவிலான சலுகைகளையும் இந்தப் புதிய விதிகள் வழங்குகின்றன. முந்தைய விதிமுறைகளின்படி, இத்தகைய சூழல்களில் குழந்தை பிறந்தவுடன், புதிய விசா வழங்குதல் மற்றும் வெளியேறும் அனுமதி உள்ளிட்ட விசா சார்ந்த சேவைகளைப் பெறுவதற்காக, பெற்றோர்கள் 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாகப் பதிவு அதிகாரியிடம் மின்னணு முறையில் தகவல் தெரிவிக்க வேண்டியிருந்தது.
திருத்த விதிகளின்படி, பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்து, அக்குழந்தையின் இந்தியக் குடியுரிமையை தக்கவைத்துக்கொள்ள அந்த பெற்றோர் விரும்பும் பட்சத்தில், இந்த துணை விதிமுறை பொருந்தாது. எனினும், ஒரு குழந்தை இந்தியாவில் வசிக்கும்போதே பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அக்குழந்தை அக்குடியுரிமையைப் பெற்ற 30 நாட்களுக்குள், பெற்றோரில் எவரேனும் ஒருவர் இத்தகவலைப் பதிவு அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
