புதுடெல்லி: இந்தியாவில் தனிநபர்கள், கோயில் அறக்கட்டளைகளின் வசம் சுமார் 32 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் திருமணங்கள், பண்டிகைகள் வரை தங்கம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இருந்தாலும் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படாத தங்கத்தின் ஒரு பெரும் கையிருப்பு ஏற்கனவே பூட்டி வைக்கப்பட்டுள்ளது
இந்தியாவில், வீடுகள் மற்றும் கோயில்களில் சுமார் 30,000 முதல் 32,000 டன்கள் வரை முடங்கி கிடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதன் மதிப்பு ரூ3.8 டிரில்லியன் டாலர்(ரூ.350 லட்சம் கோடி) ஆகும். இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, புதிய தங்கத்தை இறக்குமதி செய்வதை தவிர்த்து, வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்யுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
புதிதாக இறக்குமதி செய்வதை விடுத்து, நம்மிடம் உள்ள தங்கத்தையே மறுசுழற்சி செய்யுங்கள்\\” என்ற அவரது வேண்டுகோள், ஒரு புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிராம் தங்கமும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கரைக்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கிறது. இது பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.வீடுகள் மற்றும் கோயில்களில் இருக்கும் தங்கத்தில் வெறும் 1 சதவீதத்தை ஆண்டுதோறும் மறுசுழற்சி செய்தாலே, இந்தியாவின் தங்க இறக்குமதி 25 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
என்ன நடக்கும்?
அரசு, தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டங்கள், தங்க பத்திரங்கள் மற்றும் தங்க சேமிப்பு திட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் தங்கத்தை நிதி சந்தையில் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.அரசு திட்டங்கள் மூலம் தங்கத்தை வங்கிகளில் வைப்பு செய்தால், மக்கள் வட்டி வருமானம் பெறலாம். அதேசமயம், நாட்டின் நிதி நிலை வலுப்பெறும். உலகளவில் இந்தியா தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோராக இருப்பதால், இந்த முயற்சி பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாக இருக்கும். 32,000 டன் தங்கம், சரியான திட்டமிடலால் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
