பயிர்க்கடன் தள்ளுபடியில் தவெக அரசு பாரபட்சம்; தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்: தஞ்சையில் போலீசார் தாக்கியதால் பரபரப்பு

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டும் முதல்வர் விஜய்யை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தஞ்சையில் விவசாயிகளை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  தவெக தேர்தல் அறிக்கையின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தள்ளுபடியில் பாரபட்சம் காட்டும் முதல்வர் விஜய்யை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதன்படி தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மண்டை ஓட்டுடன் திருச்சி காவிரியில் இறங்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நேற்று காலை சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக அய்யாக்கண்ணு, 5 பெண்கள் உள்பட 100 விவசாயிகளை போலீசார் கைது செய்து உறையூரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்பு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக தமிழ் பல்கலைக்கழக பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் கேட்டை போலீசார் பூட்டினர். இதையடுத்து விவசாயிகள் நாங்கள் கலெக்டரை சந்தித்து நேரடியாக மனு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு போலீசார் அனுமதிக்காமல் விவசாயிகள் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். நாங்கள் மனு கொடுக்க தான் வந்திருக்கிறோம், எங்களை ஏன் கைது செய்தீர்கள் என்று தமிழ்நாடு காவிரி விவசாய சங்க தலைவர் பழனியப்பன் கேட்டதற்கு வல்லம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவரை நெஞ்சில் தாக்கி கீழே தள்ளிவிட்டார். விவசாயிகளின் செல்போனையும் பறித்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து போலீசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பசுமை புரட்சி பாசன விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை மற்றும் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கடைவீதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆர்.சுபாஷ் தொடங்கி வைத்தார். விவசாயிகளை தமிழக அரசு ஏமாற்றியதை தெரிவிக்கும் வகையில் நெற்றியில் பட்டை நாமம் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் விவசாயிகள் நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பேரணாம்பட்டு, பங்காரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயி திடீரென மயங்கி விழுந்தார். மற்ற விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து மாலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் பாரத் ஸ்டேட் வங்கி அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாநில அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை தவெக அரசு ஏமாற்றியதாக குற்றம் சாட்டி தலையில் துண்டு போட்டபடி விவசாயிகள் கோஷமிட்டனர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் விஜய்யை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களின் விவசாய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன், பட்டை நாமம் போட்டு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 58 கிராம கால்வாய் பாசன விவசாய சங்க நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட விவசாயிகள், நேற்று வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய கலெக்டர் ஆனந்த் மோகனை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர். போலீசார் அவர்களை வண்ணார்பேட்டையிலேயே மடக்கினர். இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 விவசாயிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனிடையே விவசாயிகள் குழுவினர் பேரணியாக வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் சிலைக்கு சென்று ரவுண்டானாவில் போராட்டம் நடத்தினர்.

சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று கோட்டை மைதானத்தில் கண்டன போராட்டம் நடத்தின. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் விஜய்யை கண்டித்தும், பயிர்க்கடனை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவதற்காக, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவாயில் கேட்டை மூடி உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் 10 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதித்தனர்.

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் வேலு மந்திராச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடன் தள்ளுபடி செய்ய மறுக்கும் விஜய் அரசை கண்டிப்பதாகவும், எந்த நிபந்தனையும் இன்றி விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் 30ம் தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஈரோடு: ஈரோடு காளைமாடு சிலை அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், தமிழநாடு சிறு குறு விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநகர செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தவெக தேர்தல் வாக்குறுதி அல்ல, தேர்தல் உத்தரவாதம் என விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்து வெற்றி பெற்ற பிறகு ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உடனடியாக பாரபட்ச அறிவிப்பை திரும்பப் பெற்று தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் நிறைவேற்ற வேண்டும். இல்லை எனில் வருகிற 30ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ‘‘விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது’’ என விவசாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர்: திருவள்ளூரில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சென்னை மண்டல தலைவர் சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஆஞ்சநேயலு, ஞானப்பழனி, பரந்தாமன், லிங்க மூர்த்தி, தமிழ்நாடு உழைக்கும் உழவர் குழு தலைவர் செந்தில்வேலன் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, தவெக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப்போல அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும், எவ்வித பிரிவினையின்றி ரத்து செய்ய வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் இருந்து சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் 5 நிர்வாகிகள் மட்டும் சென்று மனு அளிக்க அனுமதித்தனர். விவசாயிகள் அனைவரும் உள்ளே செல்வோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் பல்வேறு கூட்டமைப்பு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். மேலும் விவசாயம் செய்வது சுலபம், விளையாட்டு தான் கடினம் என பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை ஆர்ப்பாட்டத்தின்போது கண்டித்து குரல் எழுப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தின் முக்கிய நுழைவாயிலை மறித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோஷத்துடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள், அரசு அலுவலர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

Related Stories: