பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 புகையிலை பாக்கெட்டுகள்

கோவில்பட்டியில் பறிமுதல் கோவில்பட்டி, ஜூன் 2:பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு கடத்தி வரப்பட்ட 300 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கோவில்பட்டி – மந்தித்தோப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகில் சந்தேகப்படும்படி சாக்குப்பையுடன் நின்றிருந்தவர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்துள்ளார். அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்த சாக்குப்பையில் சோதனையிட்டபோது 300 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரி சின்னத்தம்பி (38) என்பதும், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து கோவில்பட்டியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. வழக்கம்போல் புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் வாங்கிக் கொண்டு, கோவில்பட்டிக்கு பஸ்சில் கடத்தி வந்துள்ளார். இந்த புகையிலை பாக்கெட்டுகளை கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், போலீசாரிடம் சிக்கியதாக தெரிவித்தார்.

Related Stories: