×

ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

கோவில்பட்டி, ஜூன் 2: ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து கோவில்பட்டி அருகே காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே உள்ளது லிங்கம்பட்டி. இந்த ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காலனி பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த இப்பகுதி பொதுமக்கள், நேற்று காலையில் காலிகுடங்களுடன் போராட்டத்திற்கு திரண்டனர். அவர்கள், கோவில்பட்டி – கடலையூர் இடையேயான சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. ஊராட்சிக்குட்பட்ட மற்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் கேட்டால் சரியான பதில் சொல்வதில்லை. தொடர்ந்து கேட்க சென்றாலோ, புகார் தெரிவித்தாலோ பைப் உடைந்து விட்டதாக கூறுகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை, என்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று அண்ணா நகர் காலனி மக்கள், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kovilpatti ,Lingampatti ,Anna… ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து