புதுடெல்லி: தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் வெங்கட சுப்பிரமணி மோகனா உட்பட உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி உட்பட 38 நீதிபதிகளாக அதிகரிக்கும் அவசர சட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் 27ம் தேதி 5 புதிய நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்தது.
இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதாக ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை சார்பில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் வெங்கட சுப்பிரமணி மோகனா, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோர் புதிய நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டு பொறுப்பேற்றதும், உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிக்கும்.
ஒரு நீதிபதி இடம் மட்டும் காலியாக இருக்கும். புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட வெங்கட சுப்பிரமணி மோகனா தமிழ்நாட்டை சேர்ந்தவர். மேலும், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன், நீதிபதி இந்து மல்ஹோத்ரா கடந்த 2018ல் வழக்கறிஞர் தொழிலில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்றார். அவர் கடந்த 2021 மார்ச்சில் ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் 12வது பெண் நீதிபதியாக பதவியேற்கும் மோகனா, நீதிபதி பி.வி.நாகரத்னாவுடன் இணைந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவராக இருப்பார். அவர் வரும் 2031 ஜூனில் ஓய்வு பெற உள்ளார்.
கோவையை சேர்ந்தவர்
59 வயதாகும் வெங்கட சுப்பிரமணி மோகனா 1988ம் ஆண்டில் கோவை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதிலிருந்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இவரை மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து அளித்து அங்கீகரித்தது. முப்படைகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்குவது தொடர்பான வழக்குகள், மூத்த குடிமக்களின் சொத்துரிமை சார்ந்த வழக்குகள், கர்நாடகா ஹிஜாப் தடை வழக்கு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இவர் ஆஜராகி வாதாடியுள்ளார்.
