×

கடத்தப்பட்ட 20 பேர் மீட்கப்படாத நிலையில் மணிப்பூர் துப்பாக்கி சூட்டில் நாகா இளைஞர் உள்பட 3 பேர் காயம்

 

இம்பால்: மணிப்பூர் காங்போக்பியில் குடிநீர் குழாய் சீரமைக்கச் சென்ற நாகா இன இளைஞர்கள் மீது மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார். மணிப்பூரில் கடந்த மே மாதம் 13ம் தேதியன்று காங்போக்பி மற்றும் நோனி மாவட்டங்களில் நடந்த இரட்டைத் தாக்குதலில் 3 தேவாலயத் தலைவர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை காரணமாக இரு சமூகங்களிலிருந்தும் தலா 48 பேர் கடத்தப்பட்ட நிலையில், 14 குக்கி இனத்தவர்கள் மற்றும் 6 நாகா இனத்தவர்கள் என மொத்தம் 20 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது தவிர தேசிய நெடுஞ்சாலை 202ல் நடந்த தாக்குதலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் குக்கி தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோன்சாகுல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாகியுகி நதி அருகே குடிநீர் குழாயை சீரமைக்கச் சென்றனர். அப்போது ராணுவ உடை அணிந்த மர்ம கும்பல் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் கச்சியாக்லுங்போ சவாங் (23) என்பவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். அவருடன் சென்ற மனோன்லுங்போ அபோன்மாய் (19) மற்றும் பௌங்கம்லாக்போ மலங்மாய் (55) ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கோன்சாகுல் கிராமத் தலைவர் ஆடம் லியாங்மாய் கூறுகையில், ‘ஒன்றிய அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட கே.என்.பி.(பி) அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்’ என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட வாலிபர் தற்போது இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு
உள்ளனர்.

Tags : Manipur ,Imphal ,Manipur, Kangboqbi ,Kangboqbi ,Noni ,
× RELATED சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான மறுமதிப்பீடு தாமதம் – மாணவர்கள் அவதி