×

அமைச்சரவை விரிவாக்கம்: மேற்குவங்க பாஜ அரசில் மேலும் 35 அமைச்சர்கள்

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ தலைமையிலான அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் புதிதாக நேற்று பதவியேற்றனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த பலம் 41 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் 208 இடங்களை கைப்பற்றி பாஜ முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக சுவேந்து அதிகாரி கடந்த மாதம் 9ம் தேதி பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜ தலைவர் சாமிக் பட்டாச்சார்யா ஆகியோர் டெல்லியில் கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்று 3 வாரங்களுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடந்தது. லோக் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில், முதல்வர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் பாஜ எம்எல்ஏக்கள் 35 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் 13 பேர் அமைச்சர்களாகவும், 3 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 19 பேர் இணை அமைச்சர்களாகவும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அமைச்சரவையின் பலம் 41 ஆக அதிகரித்துள்ளது. 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் அதிகபட்சமாக 44 அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும்.

Tags : West Bengal ,BJP government ,Kolkata ,BJP ,
× RELATED கடத்தப்பட்ட 20 பேர் மீட்கப்படாத...