திருவாரூர்: திருவாரூர் அருகே நேற்று அதிகாலை 4 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்து செங்கல் வியாபாரியை மனைவி, குழந்தைகள் கண் முன்பு வெட்டிகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் திருமுகம்(50).
செங்கல் சூளையில் செங்கல்லை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்த இவர், நேற்றுமுன்தினம் இரவு மனைவி சுதா(45), மகன் சுமன்(15), மகள் யாழினி(13) ஆகியோருடன் வீட்டில் தூங்கினார். நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 4 பேர், பூட்டியிருந்த கதவை ஆயுதங்களால் உடைத்து புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்து வந்த திருமுகம், சுதா மர்ம நபர்களை பார்த்ததும் கூச்சலிட்டனர். அதற்குள் 4 பேரும் அரிவாளால் திருமுகத்தை வெட்ட முயன்றனர்.
இதை தடுத்த சுதாவின் இடது கையில் வெட்டு விழுந்தது. இதைபார்த்து கண்விழித்த மகன், மகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மர்மநபர்கள் மனைவி, குழந்தைகள் கண் முன்பு அரிவாளால் திருமுகத்தின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த திருமுகம் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த எஸ்பி சதீஷ்குமார் மற்றும் குடவாசல் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். திருமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சுதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமுகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள் புதுக்குடியில் நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடவாசல் போலீசார் வந்து குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 3 தனிப்படையினர் கொலையாளிகளை தேடிவந்த நிலையில் குடவாசல் அருகே வடகண்டம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா (38) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், கொலையான திருமுகமும், வழக்கறிஞர் ராஜாவும் உறவினர்கள் என்பதும், திருமுகத்தின் உறவினர் பெண் ஒருவருக்கும், வழக்கறிஞர் ராஜாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனை திருமுகம் கண்டித்த நிலையில் ராஜா உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து திருமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராஜா, முகந்தனூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி (33), அம்மையப்பன் இளங்குடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (35) வடபாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தீபன் (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ‘உங்கொப்பன கொல்றத பார்…’
கொலை செய்யப்பட்ட திருமுகத்தின் மகள் யாசினி போலீசாரிடம் கூறுகையில், வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கும்பலில் ஒருவர், முதலில் என் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக தெரிவித்தார். அதன் பின்னர் உங்கொப்பனை எப்படி கொல்றேன்னு பார் என்று மற்றொருவர் கூறியதாக கதறி அழுதவாறு தெரிவித்துள்ளார்.
