×

முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும் குளறுபடி திருப்பரங்குன்றம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 100 பக்தர்கள் மயக்கம்: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை: கோயில் நிர்வாகம் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் கோயில் நிர்வாகம் பல்வேறு குளறுபடிகள் செய்ததால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் முதல்படை வீடான சுப்ரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில், வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள மதுரை மற்றும் வெளியூர்களில் இருந்தும், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் பால்குடம், காவடி, அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த வந்திருந்தனர். வழக்கமாக வைகாசி விசாக தினத்தில் திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோயில் வாசல் வரை பக்தர்கள் செல்ல தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

அதேபோல் கோயில் வாசல் வரை, சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் தடையின்றி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கத்தில் பக்தர்கள் செருப்பு அணியாமல் நடந்து செல்ல வசதியாக சன்னதி தெரு முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன் தென்னை நார் விரிப்புகள் மூலம் நிரப்பப்படும். நேற்று திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து சன்னதி தெருவின் இருபுறமும் கம்பிகளால் தடுப்புகள் அமைத்து அந்த தடுப்புகளின் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வழக்கமாக 16 கால் மண்டபத்தில் இருந்து 10 நிமிடத்தில் கோயில் வாசலை அடையும் பக்தர்கள் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் கோயிலுக்குள்ளும் நீண்ட வளைவுகளில் சுற்றி சுற்றி பக்தர்கள் செல்ல வேண்டி இருந்தது. இதனால் வழக்கமாக அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேற்றைய தினம் சுமார் 2 முதல் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சில இடங்களில் மட்டும் பெயரளவிற்கு தண்ணீர் தொட்டிகள் இருந்தாலும், கம்பி வரிசைக்குள் இருந்து பக்தர்களால் தண்ணீர் குடிக்க வெளியில் வர முடியாதவாறு இருந்ததால், கடுமையான வெயிலின் காரணமாக பக்தர்கள் பலரும் தண்ணீர் இல்லாமல் சோர்வடைந்து மயக்கமடைந்தனர். இதில் சிறுவர்கள் சிலர் கடும் வெயிலில் வேறு வழியின்றி கம்பி தடுப்புகள் அருகே சாலையில் அமர வைக்கப்பட்டனர். அதேபோல் திடீரென நடுவழியில் சில பக்தர்களை கூட்டமாக போலீசார் அனுமதித்ததால் கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

அந்த பக்தர்களுக்கு உடன் வந்த உறவினர்கள் தண்ணீர் கொடுத்தும், விசிறி விட்டும் அவர்களை அழைத்து சென்றனர்.  பின்னர் அவர்கள் அங்கிருந்த முதலுதவி சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கால் வலி, உடல்சோர்வு, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தில் நேற்று மாலை 4 மணி வரை சுமார் 163 பேர் வரை முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* ரீல்ஸ் போடும் தவெக அரசு அடிப்படை வசதியில் ‘அவுட்’: டிடிவி.தினகரன் கண்டனம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

* மயக்கம் ஏன்? அமைச்சர் விளக்கம்
மதுரையில் நேற்றிரவு மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றம் கோயில் நிகழ்ச்சியில் ஒருவர் மட்டுமே மயங்கி விழுந்துள்ளார். நேரில் போய் விசாரித்தேன். ஒரு மணி நேரத்திற்குள் 60 ஆயிரம் பேர் திரண்டதால் நடந்துள்ளது. அரை மணிநேரத்தில் சீர் செய்யப்பட்டது. எங்கள் கட்சியினர் யாரும் எந்த இடத்திலும் தவறு செய்யமாட்டார்கள்.

ஏதும் மிஸ் யூஸ் பண்ணினால் அவர் எங்கள் கட்சிக்காரராக இருக்க மாட்டார். முதல்வர் விஜய் டெல்லிக்கு போனது பிரதமரை சந்தித்து, மேகதாது அணை உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு கேட்டுத்தான். இதில் ஒளிவு மறைவு இல்லை. யூகத்தின் அடிப்படையிலான வேறு தகவல்கள் வரலாம். அது சரியானதல்ல’’ என்றார்.

* சாக்கடை கால்வாயில் அபிஷேக பால்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பால் விசாக குறடு மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வழக்கமாக அபிஷேகம் செய்யப்படும் பால், குழாய் மூலமாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆனால் இந்த முறை கோயில் நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்யாமல், அபிஷேகம் செய்யப்பட்ட பாலை அங்குள்ள சாக்கடை கால்வாயில் நேரடியாக சென்று கலக்கும் வகையில் செய்துள்ளனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய அபிஷேக பாலை சாக்கடையில் விட்ட கோயில் நிர்வாகத்தின் செயல் பக்தர்களை மிகுந்த மன வேதனை அடைய செய்தது. பக்தர் ஒருவர் கூறுகையில், ‘‘விரதம் இருந்து நேர்த்திகடனாக செலுத்திய அபிஷேக பாலை கோயில் நிர்வாகம் முறையாக பக்தர்களுக்கு வழங்காமல் சாக்கடையில் கலந்து விடுவது மிகுந்த மன வேதனையை தருகிறது. பக்தர்களின் நம்பிக்கையை சிதைக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* கோயில் நிர்வாகம் விளக்கம்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் மயக்கமடைந்ததாக தகவல்கள் வந்த நிலையில், ஒரே ஒரு பக்தர் மட்டுமே மயக்கமடைந்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* வாட்டர் ஷவர் மிஸ்சிங்
வழக்கமாக ஆர்ச் பகுதியில் கோடை காலம் என்பதால் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் வாட்டர் ஷவர் அமைக்கப்பட்டு மேலிருந்து பக்தர்களை குளிர்விக்கும்விதமாக ஷவர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படும். இந்த ஆண்டு வாட்டர் ஷவர் வசதி செய்யாததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் கொடுமைக்கு நேரடியாக ஆளாகினர்.

* போக்குவரத்து வசதி இல்லை
முறையான போக்குவரத்து வசதி இல்லாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து ஷேர் ஆட்டோக்களுக்காக அலைமோதினர். 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடிய நிலையில் அவர்களுக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் முறையான பஸ் வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தும், வெகு தொலைவிற்கு சென்றும் பஸ்சை பிடிக்க பக்தர்கள் சிரமப்பட்டனர்.

Tags : Thirupparangunram ,Subramaniaswamy Temple Vyasa festival ,Subramaniaswamy Temple ,Thirupparangundaram ,Madurai ,
× RELATED நடிகர் அஜித்குமாரின் தாயார்...