* 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது
சென்னை: சென்னை கோட்டூர்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான எளிய மக்களின் வீடுகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, திமுக அரசு சார்பில் ரூ.307 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,800 புதிய நவீன குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, வீடுகள் ஒதுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
அப்போது, 216 சதுர அடி பரப்பளவில் மக்கள் வாழ்வது சிரமம் என்று கருதிய அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், குறைந்தது 400 சதுர அடி பரப்பளவில் குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைத்து குடியிருப்புகளும் 400 சதுர அடி பரப்பளவிற்கு குறையாமல் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி கோட்டூர்புரம் பகுதியில் 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் 95 வீடுகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளை தங்களுக்கு வழங்க கோரி சென்னை கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சென்னை கோட்டூர்புரம் பிரதான சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடிந்து விழும் நிலையில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, காலியாக உள்ள புதிய குடியிருப்புகளில் தங்களுக்கு இடம் ஒதுக்க கோரி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, ‘பலமுறை அரசுக்கு மனு அளித்தும், அதிகாரிகள் ‘இன்னும் சில நாட்கள் பொறுங்கள்’ என காலம் கடத்தி வருகின்றனர்” என வேதனைபட தெரிவித்தனர். மேலும், தகுதி வாய்ந்த உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், வெளிப்படைத்தன்மையற்ற முறையில் வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும், வெளிப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் வீடுகள் திரைமறைவில் ஒதுக்கப்படுவதாகவும், மாற்று இடம் கோரி விண்ணப்பித்த பல ஏழை குடும்பத்தாரின் பெயர் பட்டியல்கள் திட்டமிட்டு விடுபட்டுள்ளதாக சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் கிண்டி, அடையாறு, சின்னமலை மற்றும் நந்தனம் நோக்கி செல்லும் சாலைகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஐடி ஊழியர்கள், அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் நெரிசலில் சிக்கி தவித்தனர். தகவலறிந்து, சென்னை மாநகர காவல் துறையினர் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசிக கடும் கண்டனம்
விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு என்பதை கடந்து சாதிய பாகுபாடு அடிப்படையில் ஒதுக்கீடு என்பது வேதனை. அனைத்து திட்டபகுதி வீடுகள் ஒதுக்கீடும் வெளிப்படைத்தன்மையோடு நேர்மையாக நடைபெற அரசு தமிழக முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
