- பெண் சிங்கம் சிறப்பு அதிரடிப்படை
- கனிமொழி
- சென்னை
- விஜய்
- முதல் அமைச்சர்
- பெண் சிங்கம் சிறப்புப் பணிப்படை…
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்கவிழா முதலில் கடந்த 27ம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடக்க இருந்தது. முதல்வர் அன்று டெல்லி சென்றதால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டது. நேற்று இத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. கடைசி நேரத்தில் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதிகரித்துவரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு?. மகளிர் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்?. தொடரும் இந்த குற்றச் சம்பங்களை தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
