சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சக தொழிலாளியை போலீசார் தேடுகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காஷ்மீர், உத்தரபிரதேசம் கவுகாத்தி, பீகார் போன்ற பகுதிகள் மற்றும் தமிழகத்திற்குள் கோவை, ஊட்டி, சேலம் போன்ற பகுதிகளுக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் வரும் பயணிகளின் பெட்டிகள், லக்கேஜ்களை தூக்குவதற்காக ரயில் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட போர்ட்டர்கள் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளிகள் உள்ளனர். ரயில் பயணிகளின் பொருட்களை தூக்குவதற்கு அவர்களுக்குள் எப்போதும் போட்டி இருக்கும்.

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் மாடியில் உள்ள பழைய ஏசி ரூமில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது வேலூர் மாவட்டம், போடியூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான பூங்காவனம்(41) இரவு வேலையை முடித்து விட்டு விடியற்காலை ரயில் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள பழைய ஏசி ரூமில் நன்றாக படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது, அவருடன் சுமை தூக்கும் சக தொழிலாளியான குமார் (எ) அலுக்கு குமார் அங்கு வந்து பெரிய கல்லை எடுத்து பூங்காவனம் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியது பதிவாகியிருந்தது. விசாரணையில் சுமை தூக்குவதில் இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூங்காவனம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தப்பியோடிய குமாரை தேடுகின்றனர்.

Related Stories:

>