சேலம்: சேலம் அருகே விவாகரத்தான 6 மாதங்களில் 7வயது மகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள புத்தூர் ஈச்சமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (28). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வாழப்பாடி பேளூரை சேர்ந்த சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 6 மாதம் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து தமிழரசி ஈச்சமரத்துக்காடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கு தனது 7 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவரிடம் இருந்து தமிழரசி விவாகரத்து பெற்றார். தமிழரசி வீட்டின் அருகேயுள்ள வெள்ளி பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை 10 மணியாகியும் தமிழரசியும் குழந்தையும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அவரது அறை கதவை தட்டினர். நீண்டநேரமாக தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தமிழரசி சேலையில் தூக்கில் சடலமாக தொங்கினார்.
அவருக்கு கீழே 7வயது மகள் இறந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். பின்னர் தமிழரசி, குழந்தையின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தமிழரசிக்கு விவாகரத்தான நிலையில் 2ம் திருமணத்திற்கு பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.
ஆனால் 7 வயது மகளை வைத்து கொண்டு இன்னொரு திருமணம் எனக்கு வேண்டாம் என கூறி மறுத்து விட்டார். இந்த மனவேதனையில் இருந்து வந்த தமிழரசி மகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றாரா? முகத்தை மூடி திணறடித்து கொன்றாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
