பக்ரீத் பண்டிகை: கட்சி தலைவர்கள் வாழ்த்து

 

சென்னை, மே.28: பக்ரீத் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக): தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும். “ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன்.இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.

முதல்வர் விஜய் (தவெக): ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன்(அமமுக): இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): நபிகள் (ஸல்) நாயகம் போதித்த சாந்தி, சமாதானம், , மன்னிப்பு, மனித நேயம், அன்பு ஆகியனவற்றை சாதி, மத, மொழி, இன பாகுபாடுகளை தாண்டி கடைபிடித்து மனித சமுதாயம் தழைத்தோங்கவும், சகோதரத்துவம், சகவாழ்வு எனும் நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்ற இத்தியாகத் திருநாளில் சூளுரைப்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாளில் பக்ரீத் நல் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்): இந்த இனிய திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் குடும்பங்களில் ஆரோக்கியமும் நலனும் நிறையட்டும். உங்கள் வாழ்வில் அமைதியும் வளமும் பெருகட்டும். அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும் தமிழகமெங்கும் என்றும் நிலைக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ(மதிமுக): தமிழ்நாட்டில் காலங்காலமாக உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும். இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

எர்ணாவூர் நாராயணன் (சமக): உலக வாழ் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி(பாமக): உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே. வாசன் (தமாக): பக்ரீத் பண்டிகையானது உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகையாகும்.இஸ்லாமிய பெருமக்கள் முன்னேற்றம் அடைந்து, மகிழ்ச்சியுடன் வாழ பக்ரீத் பண்டிகை நல்வழிகாட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாகூர் ராஜா (இந்திய தேசிய லீக்): சில மதவாத சக்திகளலால் நாட்டில் வெறுப்பு அரசியல் மூலம் இஸ்லாமிய – இந்து சகோதர்களிடையே மோதலை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய நினைக்கிறக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை முறியடித்து, நாட்டில் அமைதியும், வளமும் பெருக பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என இந்திய தேசிய லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், என்.ஆர்.தனபாலன், விஜய் வசந்த் எம்.பி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா,நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன்,இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி,இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன்,புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி,

தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன்,தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, இந்தியா நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன்,தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார்,விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: