பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகாவில் உள்ள ஷிராலி கிராமத்தின் அருகே தட்டே ஹக்கலு ஆறு ஓடுகிறது. அங்கு உள்ள ஆற்றோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத் தொழில் நன்னீர் சிப்பிகளை சேகரிக்கும் தொழிலாகும்.
இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் நேற்று ஆற்றுக்குள் இறங்கி சிப்பிகளை தேடி ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் எதிர்பாராத விதமாக இரண்டு பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அடித்து சென்ற இரண்டு பேரையும் காப்பாற்றுவதற்காக மற்றவர்களும் ஆற்றில் குதித்தபோது பலத்த நீரோட்டம் அதிகரித்ததால் அவர்களும் நீரில் மூழ்கினர்.
இந்த தகவலை அறிந்து வந்த போலீசார், மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து நடத்திய தேடுதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒன்றிய அரசு தலா ரூ.2 லட்சமும் மாநில அரசு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு அறிவித்துள்ளது.
