தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வணிக பயன்பட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு தொடரும் சூழலில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்திருநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேநீர் கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள், பேக்கரிகள் சிலிண்டர்கள் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலை கடந்த 1 மாதத்திற்குள் ரூ.1000 வரை உயர்ந்து ரூ.3,450-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய நிலைக்கு தேநீர் கடைக்காரர்கள் உள்ளிட்ட சிறுவணிகர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பேசிய டீ கடை உரிமையாளர்கள், எங்களின் வாழ்வாதாரமே சிலிண்டர்களை நம்பி தான் உள்ளது. மிகுந்த சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இந்த சூழலில், அரசு எங்களுக்கு தட்டுப்பாடின்றி சிலிண்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். சில கடைகளில் மின்அடுப்பு பயன்படுத்தப்படுவதால், வணிகர்களுக்கு மின்கட்டணம் எகிற துவங்கி உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிறுவணிகர்கள் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
