தலைநகரில் தலைகீழாக மாறிய கிளைமேட்… மெரினா பீச்சில் பலமாக வீசும் புழுதி காற்று.! யாரும் வர வேண்டாம் என எச்சரிக்கை

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை முதல் கிளைமேட் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. சென்னை மற்றும் சில புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் ஜில்லென்ற தரைக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மாநகரம் முழுவதும் இதமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக மெரினா கடற்கரையில் பலத்த புழுதி காற்று வீசி வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிக்காற்று வீசி வருதால் கடற்கரை மணல் காற்றில் பறந்ததன் காரணமாக, கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மெரினா பீச்சிற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இதனையடுத்து மெரினா கடற்கரை பகுதில் பணியில் இருக்கும் காவலர்கள், பீச்சில் ஆங்காங்கே குழுமி இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மெரினா கடற்கரையில் இருக்கும் மக்களுக்கு கேட்கும் வகையில் அலையின் சீற்றம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கிறது, தரைக்காற்றின் வேகமும் அதிகரித்தபடியே இருக்கிறது, இதனால் பலத்த புழுதி காற்று வீசுகிறது. எனவே கடற்கரையினுள் இருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மைக்கில் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறி உள்ளது.

 

Related Stories: