சென்னை: அமைச்சரின் அறையில் நடந்த தவெக உறுப்பினர் சேர்க்கையால் தலைமை செயலகமா.. இல்லை தவெக கட்சி அலுவலகமா.. என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழக வெற்றி கழகம் தனது அமைப்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் அக்கட்சியில் இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக அதிமுக கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் நிர்வாக குழப்பங்கள் காரணமாக, பல்வேறு மட்டத்திலான நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்த சூழலில், தவெகவின் பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தொடர்ந்து பலர் கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டைகளை பெற்று வருகின்றனர்.
இதுவரை கட்சி அலுவலகங்கள் அல்லது பொதுக்கூட்ட மேடைகளில் மட்டுமே நடைபெற்று வந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகள், தற்போது சென்னை தலைமை செயலகத்திலேயே நடைபெறுவது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, அரசு நிர்வாக பணிகள் நடைபெறும் தலைமை செயலக வளாகம் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்ற மரபு நிலவி வரும் நிலையில், அங்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர், தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதன்படி, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும் முன்னாள் சென்னை மாநகராட்சி உறுப்பினருமான சிவராஜ், அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெயதேவி, தென் சென்னை அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நுங்கை மூர்த்தி, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 110வது வட்ட செயலாளர் கேபிள் டிவி மாரி, 118வது வட்ட செயலாளர் பச்சையப்பன் என்ற ஜிம்மிலி, 113வது வட்ட செயலாளர் பி.சின்னையா, அம்மா பேரவை மாவட்ட தலைவர் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.
இந்நிகழ்வில் அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக மாநில அம்மா பேரவை பொருளாளரும் வழக்கறிஞருமான நவநீதன், தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
இவர்களும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அரசியல் பிரமுகரான கே.சி.ஆனிமுத்தும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமைச் செயலகத்துக்கே வந்து கட்சியில் இணைவது, அரசியல் கவனத்தை அதிகரித்துள்ளது.
பொதுவாக அரசு நிர்வாக நடவடிக்கைகள், மக்கள் குறைதீர் சந்திப்புகள், துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் அதிகாரப்பூர்வ கோப்புகள் பரிசீலிக்கப்பட வேண்டிய இடமாக தலைமைச் செயலகம் பார்க்கப்படுகிறது. அத்தகைய இடத்தில் தினசரி அரசியல் கட்சி நிர்வாகிகள் வந்து உறுப்பினர் சேர்க்கை செய்வது நிர்வாக மரபுகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமை செயலகத்துக்கே நேரடியாக வந்து கட்சியில் இணைவது, ‘சென்னை தலைமை செயலகமா அல்லது தமிழக வெற்றி கழக அலுவலகமா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், அமைச்சர்கள் தங்கள் அரசுப் பதவியையும், அரசின் அதிகாரப்பூர்வ வளாகத்தையும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகம் என்பது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. அது எந்த ஒரு கட்சியின் அரசியல் மையமாகவும் மாறக்கூடாது என்று என விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருக்கும் சூழலில், தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அமைச்சரின் அறைக்கு வருவது அதிகாரிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாக வளாகங்கள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுவது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்றும், அதிகாரப்பூர்வ பணிகளுக்காக மக்கள் வரும் இடத்தில் அரசியல் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இருப்பினும், அரசு பணிகள் நடைபெறும் தலைமை செயலக வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
