திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதியில் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம், “பிரச்சினையின்றி தொழில் நடத்த வேண்டுமெனில் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்” என விஏஓ சரவணன் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தொலைபேசி உரையாடல் மற்றும் பணம் பெறும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், புத்தாநத்தம் காவல் நிலையம் அருகே உள்ள விஏஓ அலுவலகம் முன்பு ஒருவர், “நீங்கள் ரூ.50 ஆயிரம் கேட்டீர்களாம்” என்று கேட்க, அதற்கு விஏஓ சரவணன், “பட்டாவிற்கே ரூ.5 ஆயிரம் வாங்குகிறோம். இப்போதைக்கு ரூ.20 ஆயிரமாவது கொடுங்கள்” என பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும் மற்றொரு வீடியோவில், கருப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து விஏஓ சரவணனிடம் வழங்க, அதை அவர் பெற்றுக்கொள்வதும் பதிவாகியுள்ளது. அதேபோல் வெளியான தொலைபேசி உரையாடலில், “வண்டி ஓடும் போது தகவல் கொடுங்கள். ஜோனல், டி.டி. எல்லாரும் ரவுண்ட்ஸ்ல இருக்காங்க. எனக்கு பிரச்சினை வந்துவிடும்” என விஏஓ பேசுவதும், அதற்கு மணல் வியாபாரி, “நான் பர்மிட் போட்டுத்தான் ஓட்டினேன். இப்போது அவசரத்திற்காக செய்கிறேன்” என பதிலளிப்பதும் இடம்பெற்றுள்ளது.
மேலும், “நீங்கள் ரூ.50 ஆயிரம் கேட்டீர்களாம்; அவ்வளவு தர முடியாது” என மணல் வியாபாரி கூற, “மேல் அதிகாரி வரை தகவல் சென்றுவிட்டது. இப்போதைக்கு பார்த்து செய்து விடுங்கள். மாதம் எவ்வளவு என்பது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்” என உரையாடல் தொடர்கிறது.
இந்த வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை மணல் வியாபாரியே வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேசியபடி பணம் வராததால், மணல் கடத்தல் குறித்து விஏஓ மற்றொருவரின் பெயரில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணல் வியாபாரி லஞ்சம் வாங்கும் காட்சிகளை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஏஓ சரவணன் லஞ்சம் வாங்கும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
