கரூர்: கரூரில் 41 பேர் பலி வழக்கில் சிபிஐயிடம் உண்மையை கூறிய போலீஸ் அதிகாரிகளை விஜய் பழிவாங்கியதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள், போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 3 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், தனிப்பிரிவு காவலர்கள் என 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கரூர் மாவட்டம் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ்,
தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், கரூர் புறநகர் டிஎஸ்பி அப்துல் கபூர், தர்மபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவருமே டம்மி பதவிக்கு மாற்ற செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தென்னிலை இன்ஸ்பெக்டர் திலக், சின்னதாராபுரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், நங்கவரம் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ராஜாமணி, ராமலிங்கம், மோகன்ராஜ், கதிர்வேல் ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவ விசாரணை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்தநிலையில் கரூரில் போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கரூரில் 41 பேர் இறந்த வழக்கை ஆரம்பத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. அதில் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் இடம் பெற்றிருந்தனர். இதன்பின் வழக்கு சிபிஐ கைக்கு மாறியது.
இதையடுத்து இந்த 2 பேரும் கரூரிலும், டெல்லியிலும் சிபிஐ முன் ஆஜராகி நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளனர். டெல்லிக்கு 2 முறை சென்று வந்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் தமிழக அரசால் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இந்த 2 அதிகாரிகளும் கரூர் வேலுசாமிபுரத்தில் என்ன நடந்தது, எதனால் 41 பேர் இறந்தனர். அதற்கு காரணம் யார் என விரிவாக சிபிஐயிடம் தெரிவித்துள்ளனர். இந்த ஆத்திரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். வேறு எந்த மாவட்டத்திலும் இப்படி ஒரே நாளில் 19 பேர் மாற்றப்படவில்லை. கரூரில் தான் இப்படி நடந்துள்ளது.
இதில் இருந்தே இது முதல்வர் விஜய்யின் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளலாம். உண்மையிலேயே 41 பேர் இறந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விடுத்து வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை பழிவாங்குவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து தினமும் கொலை, கொள்ளை நடந்து கொண்டே இருக்கிறது. சட்டம், ஒழுங்கை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சிந்திக்காமல், இப்படி போலீசாரை பழிவாங்குவது நல்ல போக்கு அல்ல’’ என்றனர்.
புலம்பும் போலீசார்
இடமாறுதலுக்கு உள்ளான சில போலீசார் கூறுகையில், ‘‘சம்மந்தமே இல்லாமல் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றி இருக்கிறார்கள். இது வேதனை தருகிறது. இதன் மூலம் காவல் துறையை எப்படி கையாள்வது என்ற சிந்தனை, ஆட்சி மேலிடத்துக்கு கொஞ்சம் கூட இல்லை என்பது தெரிகிறது’’ என்றனர்.
