×

வரதட்சணை கொடுமையால் நடிகை மரணம்; சினிமாவில் காட்டப்படும் மாய பிம்பங்களை நம்பி ஏமாற வேண்டாம்: பெண்களுக்கு பாஜக நடிகை கங்கனா அட்வைஸ்

போபால்: திருமணமான பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த நடிகையும், அழகிப்போட்டி வெற்றியாளருமான த்விஷா ஷர்மா (31), கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கேட்டு மாமனார் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக த்விஷாவின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

உயிரிழப்பதற்கு முன், ‘அம்மா, என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள், என் வாழ்க்கை நரகமாகிவிட்டது’ என த்விஷா தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது அம்பலமானது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கணவர் சமர்த் சிங்கை தேடி வருகின்றனர். ஆனால், த்விஷா மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததாக கணவர் தரப்பினர் புகாரை மறுத்துள்ளனர்.

இதுகுறித்து பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட பதிவில், ‘இந்திய சமூகம் திருமணத்திற்கு பின் பெண்களைக் கைகழுவி விடுவதில் மிகவும் மோசமானதாக உள்ளது. தினமும் இளம் பெண்கள் இதுபோன்ற கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் சினிமா காட்டும் மாய பிம்பங்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம். எதற்கும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் கவுரவம் தான் மிக முக்கியமே தவிர, திருமணம் அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Kangana ,Bhopal ,Kangana Ranaut ,Dwisha Sharma ,Bhopal, Madhya Pradesh ,
× RELATED ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி...