×

டெட்ரா பேக்கில் மது விற்பனை – உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: டெட்ரா பேக், பிஇடி பாட்டில்கள் மற்றும் சிறு பொட்டலங்கள் போன்ற சிறிய பேக்கிங்கில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உரிய எச்சரிக்கை இல்லாமல் சாதாரண பழச்சாறு பொருட்களைப் போல ஏமாற்றும் வகையில் தோற்றமளிப்பதாகவும், இதனால் 18 வயதுக்குட்பட்டோர் மது அருந்துதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் பொது இடங்களில் மது அருந்துதல் போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான அமைப்பு (Community against Drunken Driving) குற்றம் சாட்டி இருந்தது .

CADD சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விபின் நாயர், புகையிலைப் பொருட்களைப் போலில்லாமல் , இதுபோன்ற பொட்டலங்களில் விற்கப்படும் மதுபானங்களில் முக்கிய எச்சரிக்கைகள் இடம்பெறுவதில்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டார் . இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பக்ஷி மற்றும் நீதிபதி விபுல் பன்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கும் பல்வேறு மாநில அரசுகளின் கலால் துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பூங்காக்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் போன்ற பொது இடங்களில் மதுபானங்களை மறைத்து வைத்து அருந்துவதை எளிதாக்கும் வகையில், அன்றாட பானப் பொருட்களைப் போன்ற கையடக்கப் பொட்டலங்களில் இவை அதிகளவில் விற்கப்படுகின்றன. பொட்டலங்களில் பழங்களின் படங்களைக் கொண்டு, “பண்டி பிரீமியம் வோட்கா,” “செல்லி மாங்கோ வோட்கா,” மற்றும் “பிரீமியம் ரோமனோவ் வோட்கா – ஆப்பிள் த்ரில்” போன்ற பெயர்களில் சந்தைப்படுத்தபடுகிறது என்று மனுதாரர் மனுவில் புகார் தெரிவித்திருந்தார்.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED ‘இளைஞர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்;...