திருமண மண்டப கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்

ஓமலூர், மார்ச் 3: ஓமலூர் அருகே அம்மா திருமண மண்டப கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே பச்சனம்பட்டி, பெரியேரிப்பட்டி ஊராட்சிகள் பின்தங்கிய அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியாகும். இங்குள்ள மக்கள் தங்களது வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு வசதியாக கிராமத்தின் மையப்பகுதியில் திருமண மண்டபம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரண்டு ஊராட்சிக்கும் தலா ₹60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியேரிப்பட்டி கிராமம் ரெட்டிபட்டி தானியாகரடு, பச்சனம்பட்டி கிராமம் மோட்டூர் பகுதியிலும் திருமண மண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

ஆனால், 2 மாதத்திலேயே பணிகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அதிகாரிகள்  கூறுகின்றனர். 2 ஆண்டுகளாக மண்டப கட்டுமான பணிகள் பாதி மட்டுமே நடந்துள்ளது. இதனால், அரசு நிதி மக்களுக்கு பயனின்றி வீணாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>