×

சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலையில் மாநகராட்சி துப்புரவு பெண் ஊழியருக்கு அதிகாலையில் பாலியல் தொந்தரவு: பெண் வன்கொடுமை சட்டத்தில் பெயிண்டர் கைது

 

 

சென்னை: சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலையில் அதிகாலை துப்புரவு பணி செய்த மாநகராட்சி ஒப்பந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெயிண்டரை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ெசய்தனர். சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் ராயபுரம் பகுதியை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் துப்புரவு பணி செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அதிகாலை கே.கே.நகர் காமராஜர் சாலையில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர், துப்புரவு பெண் ஊழியரிடம் பேச்சுக்கொடுத்தபடி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஊழியர் அந்த நபரை கடுமையாக திட்டியுள்ளார்.

ஆனாலும் அந்த நபர் பணம் கொடுப்பதாக கூறி வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே துப்புரவு பெண் உதவி கேட்டு சத்தம் போடவே, சாலையோரம் பணியாற்றி கொண்டிருந்த சக ஊழியர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த நபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாநகராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, அவர் கே.கே.நகர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (36) என்றும் கொலை முயற்சி உட்பட 4 குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

போலீசார் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் துப்புரவு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து கே.கே.நகர் போலீசார் ராஜ்குமார் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Tags : Chennai ,Kamarajar Salai ,KK Nagar, Chennai ,
× RELATED புதுகை அருகே கொலை வழக்கில்...