×

புதுகை அருகே கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிறுவன் சரமாரி வெட்டிக்கொலை: 5 பேர் கும்பல் வெறிச்செயல்

 

இலுப்பூர்: புதுகை அருகே கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக சொந்த ஊருக்கு வந்த சிறுவன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமநாடு பகுதி சேர்ந்தவர் முருகேசன். மகன் அன்புச்செல்வன் (17). ஐடிஐ வரை படித்துள்ள இவர் ஓசூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் மீது கடந்த 2024ல் இதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரத்திற்கு முன்பே ஊருக்கு வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் டூவீலரை நிறுத்தி நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த நண்பர் இவரது டூவீலரை வாங்கி கொண்டு மதுபானம் வாங்க அருகே உள்ள பெருமாநாடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வராததால் அன்புச்செல்வன் டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் புதுக்கோட்டை மெயின் ரோடு சாலை அருகே சென்றுள்ளார்.

அங்கு ஒரு ஓட்டல் அருகே அவரது டூவீலர் இருந்தது. அதன் அருகே சென்றபோது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அன்புச்செல்வனை சரமாரியாக வெட்டியது. தலை மற்றும் கை, கால்களில் பலத்த வெட்டு காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளதில் பலியானார். பின்னர் அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியது. தகவலறிந்து அன்னவாசல் போலீசார் வந்து அன்புச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இடம் டாஸ்மார்க் கடை அருகே உள்ளதால் நேற்று அந்த கடைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்தக் கொலை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் கொலை செய்யப்பட்டாரா என அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Saramari ,Ilupur ,Bhutugai ,Pudukkottai District ,Annavasal ,
× RELATED திருப்பத்தூர் அருகே நடுரோட்டில்...