ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹாலிக் அலாவுதீன் (32). தற்போது சென்னை குரோம்பேட்டையில் மருத்துவராக உள்ளார். இவர், ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் 1 ஏக்கர் 98 சென்ட் நிலத்தை தாயார் பெயரில் ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வந்துள்ளார். பதிவு செய்வதற்கு ஹாலிக் அலாவுதீனிடம் ரூ.50 லட்சத்தை சார்பதிவாளர் ராமநாதன் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், ராமநாதன் வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து சார்பதிவாளரின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த அயூப்கான் என்பவரிடமும் முதல் கட்டமாக ரூ.17 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளார்.
இதன் பிறகு மீதமுள்ள பணத்தை தந்தால்தான் பத்திரம் பதிவு செய்யப்படும் என சார்பதிவாளர் ராமநாதன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் பேரம் பேசி இறுதியாக ரூ.15 லட்சம் கேட்டு, அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.12 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த ராமநாதன் கூறியுள்ளார். இதுபற்றி ஹாலிக் அலாவுதீன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின்பேரில் அவர், சார்பதிவாளர் ராமநாதனிடம் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ராமநாதனை கைது செய்தனர்.
உடந்தையாக இருந்த ஏஜென்ட் அயூப் கான் என்பவரையும் கைது செய்தனர். இதையடுத்து அங்கு பத்திரப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஏற்கனவே லஞ்சமாக பெற்ற ரூ.20 லட்சத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பரமக்குடி பெருமாள் தெருவில் உள்ள சார்பதிவாளர் ராமநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அங்கு பணம் எதுவும் கைப்பற்றப்படாததால், எமனேஸ்வரம் அடுத்த வீரபெருமாள் காலனியில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
