×

ரூ.17 லட்சம் மதிப்பு கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்; மாலையில் பணி ஆணை: புஸ்சி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம்

 

சென்னை: உலகத்திலேயே முதல் முறையாக தவெக ஆட்சியில் காலையில் டெண்டர் விடப்பட்டு, மாலையில் பணி ஆணை வழங்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம் நடந்தது. தவெக ஆட்சிக்கு வந்தால் தூயசக்தி ஆட்சி நடைபெறும் என்றும், ஒரு துறையிலும் ஒரு பைசாகூட ஊழல் நடக்காது, எல்லா பணிகளும் மிகவும் நேர்மையாக நடக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமாக விஜய் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். பொதுமக்களும் இனி தமிழ்நாட்டில் ஊழலே நடக்காது, எல்லாம் வெளிப்படையாக நடைபெறும் என்று நம்பி வாக்களித்தனர். இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி துறையில் ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது.

அதாவது காலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அன்று மாலையே டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் பணி ஆர்டர் வழங்கப்பட்ட சம்பவம்தான் இன்று தமிழகம் முழுவதும் சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக உருவாகியுள்ளது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு இ-டெண்டர் வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கம் தொட்டி கட்டுமான பணிக்காக ரூ.16 லட்சத்து, 83 ஆயிரத்து 194 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது.

இதில் அடுத்து நடந்ததுதான் சுவாரஸ்யம். அதாவது, 19ம் தேதி (நேற்று) காலை 9 மணிக்கு டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியானது. நேற்று மாலை 3 மணிக்குள் டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று மாலை 4 மணிக்கு டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, டெண்டர் பணிகள் அனைத்தும் 6 மணி நேரத்துக்குள் முடிவடையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த டெண்டர் தொடர்பான தகவல்கள் எதுவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இதுபோன்ற டெண்டர் தமிழக அரசால் கோரப்படுவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று ஊரக உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் புஸ்சி ஆனந்த். அவரது துறை மூலமே இந்த டெண்டர் கோரப்பட்டு இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், புஸ்சி ஆனந்த் அமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று 2 நாள் தான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு அதிசய டெண்டர் வழங்கி, தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த டெண்டர் விவகாரம் பற்றி சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகி வைரலானது. இதையடுத்து டெண்டர் உடனே ரத்து செய்யப்பட்டது.

Tags : Bussi Anand ,Chennai ,Thaveka ,Rural Local Government Minister ,
× RELATED 23 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில்...