திருப்பூர்: சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ஆளும் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் யூ-டியூப் சேனல்கள், சமூக வலைதள பக்கங்களை குறிவைத்து அவற்றின் மீது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போலி புகார் அளித்து முடக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுமட்டுமன்றி, கணக்குகளை ஹேக்செய்ய ஓடிபி மற்றும் மர்ம லிங்க்குகளை அனுப்பி ஊடுருவ முயலும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் அரசியல் பேசி வரும் சில நெறியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அதே நேரத்தில் மாற்றுக்கருத்துடைய ஊடக பக்கங்களை முடக்க நடக்கும் இந்த டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து, காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஸ்ட்ரேஞ்ச் டாக்ஸ் பக்கத்தின் நெறியாளர் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எங்களது பக்கத்தில் ஒரு புலனாய்வு வீடியோ வெளியிட்டிருந்தோம்.
அதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததையும், தற்போது திடீரென அவை நடிகர் விஜய்க்கு ஆதரவான பக்கங்களாக மாற்றப்பட்டு அவரை தேசிய அளவிலான தலைவராக முன் நிறுத்த முயல்வதையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியிருந்தோம். இந்த வீடியோ வெளியான அடுத்த அரை மணி நேரத்திலேயே எங்களது சமூக வலைதள பக்கங்களை முடக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக தொடங்கின.
எங்களது யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்குவதற்காக தொடர்ந்து போலி புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், நேற்று முன்தினம் முழுவதும் எங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குள் நுழைய முயன்று, அதற்கான ஓடிபி மற்றும் லிங்க்குகளை தொடர்ந்து அனுப்பியுள்ளனர். அதேபோல, மைக்ரோசாப்ட் கணக்கு மூலமாகவும் எங்களது யூ-டியூப் பக்கத்தை ஹேக் செய்ய ஒன்டைம் பாஸ்வேர்டுகளை அனுப்பி பார்த்துள்ளனர்.
ஒருவேளை அவர்கள் அனுப்பிய லிங்க்கை நாங்கள் கிளிக் செய்திருந்தால், எங்களது ஒட்டுமொத்த சேனலும் ஹேக் செய்யப்பட்டிருக்கும். இதற்கு பின்னணியில் தவெக அரசு அமைய உறுதுணையாக இருந்த ரூட் நிறுவனம் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார். எங்கள் சேனல் முடக்கப்பட்டாலும் மீண்டும் மக்களுக்காக உண்மைகளை வேறொரு சேனல் மூலம் பதிவிட்டுக்கொண்டேதான் இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
