×

பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாதையில் குப்பை கழிவுகள் குவிந்த படிக்கட்டு: பயணிகள் தவிப்பு

ஆலந்தூர்: பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாதையில் குப்பை கழிவுகள் குவிந்து, சுகாதாரமற்று காணப்படும் படிக்கட்டால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பரங்கிமலை ரயில் நிலைய தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் எளிதில் கடப்பதற்காக பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. பாதசாரிகள் நடந்து ரயில் நிலையம் செல்ல சுரங்கப்பாதையின் இருபுறமும் படிக்கட்டு நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதையை ஆலந்தூர், பரங்கிமலை, ஆதம்பாக்கம் மேற்கு, வேளச்சேரி, மடுவன்கரை, வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  ஆலந்தூர் வழியாகவும், ஆதம்பாக்கம் வழியாகவும் வரும் பெரும்பாலான ரயில் பயணிகள் பரங்கிமலை ரயில் நிலைய டிக்கெட் கவுன்டருக்கு செல்ல வலப்புறம் உள்ள படிக்கட்டு நடைபாதையை பயன்படுத்தி வந்தனர்.

இட புறமாக உள்ள படிக்கட்டு நடைபாதையை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலை ஏற்பட்டது. மேலும் இரவு நேரங்களில் இந்த படிக்கட்டு நடைபாதையில் செல்ல மக்கள் தயங்கி வந்தனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அந்த படிக்கட்டு நடைபாதை வழியாக செல்வதற்கு மக்கள் அச்சப்பட்டனர். இதை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் இந்த படிக்கட்டு நடைபாதையில் வந்து மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதை ரயில்வே நிர்வாகத்தினர் கண்டுகொள்வதே இல்லை. எந்த ஒரு பராமரிப்பு வசதிகளையும் செய்வதில்லை. படிக்கட்டு நடைபாதை முழுவதும் மதுபாட்டில்கள் கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் குப்பை கூளங்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை மண்டி கிடப்பதுடன் சிறுநீர் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. அதேபோல் மக்கள் பயன்படுத்தக்கூடிய வலது புறம் உள்ள படிக்கட்டு நடைபாதையும் குப்பை கழிவுகள் நிரம்பி காணப்படுகிறது.

இதனை அச்சத்துடன் ரயில் பயணிகள் கடந்து செல்ல கூடிய நிலை ஏற்படுகிறது. இருபுறமும் சரியான விளக்கு வசதிகள் இன்றி இருண்டு காணப்படுகிறது. சுகாதாரமற்ற முறையான பராமரிப்பின்றி காணப்படும் இந்த இரு படிக்கட்டு நடைபாதையை ரயில்வே நிர்வாகத்தினர் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Parangimalai ,Alandur ,Parangimalai railway ,
× RELATED பெரம்பூரில் சிக்னல் கோளாறு மின்சார ரயில் சேவை பாதிப்பு