சென்னை: சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு பிரபல ரவுடிக்கு சலுகை வழங்கிய இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவ்வப்போது விசாரணைக்காக நீதிமன்றத்திற்கும், மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
சிறை கைதிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் மட்டுமின்றி, ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு அழைத்துச் செல்வர். இந்நிலையில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி என்ற கைதியை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது அவருக்கு சலுகைகள் வழங்கியதாக, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, காவலர்கள் திருமுருகன், செல்லதுரை ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கையூட்டு பெற்றதை தொடர்ந்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் நிரூபிக்கப்பட்டதால் சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக், மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். கடந்த ஜனவரி 24ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டு புழல் சிறை நோக்கி போலீஸ் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் போலீசார் மற்றும் ரவுடி வெள்ளைக்காளி ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 15 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடியது.
வெடிகுண்டு வீச்சு வழக்கில் சம்பந்தப்பட்ட கொட்டு ராஜா என்பவரை போலீசார் என்கவுன்டர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய மாதங்களில் வழக்கு விசாரணைக்கு, நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது ஆய்வாளர் மாரிமுத்து போலீஸ்காரர்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகியோர் ரவுடி வெள்ளைக்காளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சலுகை வழங்கியுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிக்கு சலுகை வழங்கியதாக காவலர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
