சென்னை: சென்னை அருகே காக்களூரில் ஒரேநாளில் வெறிநாய் கடித்து 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து காக்களூர் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் முதியவர்கள், எங்கே நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர். இந்நிலையில் காக்களூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்த நிலையில், அந்த நாய்க்கு திடீரென வெறி பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சாலையில் செல்லும் நபர்கள், வீட்டில் இருந்த பெண்கள், முதியவர் என கண்ணில்படும் நபர்களை எல்லாம் விரட்டி விரட்டி கால், பாதம், முட்டி என ஆங்காங்கே கடித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சரசு (47) மற்றும் பெண்கள், முதியவர்கள் உள்பட 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேபோல் நாய் கடித்து காயமடைந்த காக்களூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (65), சுரேஷ் (42), ரவிக்குமார் (26), பாஸ்கர் (47), லோகநாதன் (60) உள்பட 18 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாயை பிடிக்க பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் 18 பேரை நாய் கடித்துள்ள சம்பவம் காக்களூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
