திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மதுபான பார்கள் மூடப்பட்டதால் குடிமகன்கள் சாலையை திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் குறிப்பாக, பெண்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்ததும், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலைய பகுதிகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் சுமார் 717 டாஸ்மாக் கடைகளை மூட 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மூடப்பட்டு வருகின்றன.
மேலும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக மது விற்பனை தடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், காலையிலேயே மதுபான பார்களில் மது பாட்டில்கள் விற்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வந்த பதிவுகளை வைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பாரில் மதுபானம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் காலையில் மதுபானம் விற்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை காட்டி திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன்தாஸ் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, திருவொற்றியூர் மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுபான கடைகளிலும் கூடுதல் நேரம் மது விற்கக் கூடாது, அரசு நிர்ணயித்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவொற்றியூரில் டாஸ்மாக் கடைகளில் இயங்கி வந்த 5 பார்கள் கடந்த 3 தினங்களாக முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குடிமகன்கள் மது அருந்த இடமில்லாமல் வீட்டிற்கு சென்று மது அருந்துவதும், சிலர் மதுபான கடையின் வாசலில் குடிப்பதும், மதுபான கடைகள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்கள், போக்குவரத்து சாலைகள், மூடப்பட்டிருக்கும் கடைகள் போன்ற பகுதியில் நின்று குடித்துவிட்டு டம்ளர் மற்றும் பாட்டில்களை வீசி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள், அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் பொதுமக்கள் விசாரித்த போது மாநகர காவல் ஆணையர் உத்தரவு வந்தால் தான் திருவொற்றியூரில் மதுபான பார்கள் இயங்கும் என்று கூறியதாக தெரிகிறது. இதுபோல் மதுபான பார்கள் மூடப்பட்டதால், திருவொற்றியூரின் பல பகுதிகளில் சாலை ஓரங்கள் திறந்தவெளி பார்களாக மாறியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்கள் குடிமகன்களும், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக திருவொற்றியூரில் பார்களை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
