புழல்: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் அம்பத்தூர் சாலை சந்திப்பு, மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல் கழனி, சாமியார் மடம் மற்றும் செங்குன்றம்- திருவள்ளூர் கூட்டுச்சாலையில் இருந்து திருவள்ளூர் நெடுஞ்சாலை செங்குன்றம் ஆலமரம், இந்திரா நகர், காந்தி நகர், பம்மது குளம், கலைஞர் கருணாநிதி நகர், அம்பேத்கர் நகர், பெருமாள் அடி பாதம், பாலாஜி நகர், எடப்பாளையம் மற்றும் அலமாதி வரை உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பைக்கில் செல்கின்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திடீெரென மாடுகள் ஓடிவரும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிடுகின்றனர்.
‘’சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்துக்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளது. பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாட்டுத் தொழுவத்தில் அடைக்கவேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். செங்குன்றம், புழல் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
