புழல்: சோழவரம் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆகாயதாமரைகள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் சீராக செல்வது தடை ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி. இந்த, ஏரியின் முழு கொள்ளளவு நிரம்பினால் உபரிநீர் மதகு வழியாக நல்லூர், விஜயநல்லூர், ஆட்டம் தாங்கல், எம்ஜிஆர் நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் வழியாக புழல் ஏரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.தற்போது, உபரிநீர் கால்வாயில் பல இடங்களில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
மேலும், கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் கழிவுநீரும், குப்பைகளும் கொட்டப்பட்டு வருவதால், துர்நாற்றம் வீசுவதுடன் புழல் ஏரியில் கலப்பதால் ஏரியின் தண்ணீர் மாசு அடைந்து வரும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து செங்குன்றம் நீர்வளத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உபரிநீர் கால்வாயில் உள்ள ஆகாய தாமரைகளையும், குப்பை மற்றும் கழிவு பொருட்களையும் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; சோழவரம் ஏரியின் உபரிநீர் கால்வாயில் இரண்டு பக்கங்களின் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கழிவுநீர் மற்றும் குப்பைகளை விடுவதால் உபரிநீர் புழல் ஏரிக்கு செல்வதற்கு தடையாக ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள், கால்வாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, கரையின் இரண்டு பக்கங்களிலும் நிரந்தரமாக தடுப்பு கம்பிகளை வைத்து, குப்பை மற்றும் கழிவுநீரை விடாமல் இருக்கவும், கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
