×

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தால் திருப்பதியில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு: கடந்த 2ம் தேதி அதிகபட்சமாக 91 ஆயிரம் பேர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து திருமலையில் வரிசைகளில் பக்தர்கள் உள்ளே நுழைவது முதல் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்து வெளியே வரும் வரை சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து ஏஐ செயலி மூலம் கூட்டம் அதிகமாக இருந்தாலும், பக்தர்கள் வசதியாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலையில் பக்தர்களின் கூட்டம் பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், தேவஸ்தானம் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பக்தர்களுக்கு விரைவான மற்றும் வசதியான தரிசனத்தை வழங்க திறம்பட செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் திருமலையில் உள்ள பகுதிகளில் நிலவும் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பக்தர்கள் எந்த பகுதியிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாதவாறு வரிசைகளை சீரமைப்பது, தேவைப்படும் இடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, குடிநீர், பால், அன்னப் பிரசாதம் மற்றும் மருத்துவ சேவைகளை விரைவாக வழங்குவது போன்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இதனால், தரிசன நேரத்தை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நாராயணகிரி மற்றும் வைகுண்டம் வரிசை வளாகங்களில், டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் பக்தர்களின் கூட்டம் மதிப்பிடப்பட்டு, அதற்கேற்ப பக்தர்களை படிப்படியாக முன்னே அனுப்பும் முறை செயல்படுத்தப்படுகிறது. இதனால், பக்தர்கள் எந்த பிரச்னைகளையும் சந்திக்காமல் சுமுகமாக சுவாமி தரிசனம் செய்ய கோயிலை அடைகின்றனர்.

தற்போது, ​​கோடைக்கால கூட்ட நெரிசல் காரணமாக, சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், சாதாரண நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2ம் தேதி அன்று அதிகபட்சமாக 91,005 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Lord Shiva ,Tirupati ,Tirumala ,Tirupati Ezhumalaiyan ,Vaikuntam Q Complex ,
× RELATED விமான சேவைகளை குறைக்கிறது ஏர் இந்தியா