×

எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க பிரதமரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

புதுடெல்லி: எரிபொருள் தேவையை குறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய நிலையில் பிரதமர் மோடி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிறன்று ஐதராபாத்தில் தெலங்கானா பாஜ ஏற்பாடு செய்திருந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொதுமக்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், நகரங்களில் மெட்ரோ சேவையை பயன்படுத்த வேண்டும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், பார்சல் போக்குவரத்துக்கு ரயில் சேவையை பயன்படுத்துதல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி, தனது அதிகாரப்பூர்வ கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் எஸ்பிஜி குழுவினர், சாத்தியமான இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எஸ்பிஜி நெறிமுறையின்படி அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களில் எந்தவித சமரசமும் செய்யப்படாமல் பராமரிக்கும் அதே வேளையில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று பிரதமர் மோடியின் கான்வாயில் 2 கார்கள் மட்டுமே சென்றன. ஏற்கனவே குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை அளவு குறைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* முதல்வர்களின் கான்வாய் வாகனங்களும் குறைப்பு
பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணுதியோ சாய் தனது கான்வாய் வாகனங்களின் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல், அமைச்சர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களின் பொறுப்பாளர்கள் வாகனங்களை அளவோடு பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவும் தனது கான்வாய் வாகன எண்ணிக்கையை மிக குறைந்த அளவாக குறைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,US ,Iran ,
× RELATED விமான சேவைகளை குறைக்கிறது ஏர் இந்தியா