×

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2441ஆக நிர்ணயம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 14காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லுக்கு 2026-2027 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்திற்கு சாதாரண மற்றும் ‘ஏ’ தர வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது முறையே குவிண்டாலுக்கு ரூ.2441 மற்றும் ரூ.2461 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது ரூ.557 உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.8267ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீண்ட இழை வகை பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.8667 ஆக விலை கிடைக்கும். சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.622 உயர்த்தப்பட்டு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.8343ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தை பொது-தனியார் கூட்டாண்மை முறையில் மேம்படுத்துவதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தூய எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நிலக்கரி வாயுவாக்கத்திட்டங்களை ஊக்குவிக்க ரூ.37,500கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக ரூ.3000லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

* அதிவேக ரயில் பாதை திட்டம்
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் தோலேரா நகரங்களுக்கு இடையே 134கி.மீ. நீளமுள்ள இரட்டைப்பாதை கொண்ட செமி அதிவேக ரயில் பாதையை சுமார் ரூ.20,667 கோடி மதிப்பில் அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டமிடப்படும் முதல் செமி-அதிவேக ரயில் வழித்தடமாக இந்த திட்டம் அமையும்.

Tags : Union Cabinet ,New Delhi ,Cabinet Committee on Economic Affairs ,Modi ,
× RELATED விமான சேவைகளை குறைக்கிறது ஏர் இந்தியா