மாடுகள் வரத்து குறைவால் வியாபாரம் மந்தம் வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில்

வேலூர், மே 13: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. வேலூர் அடுத்த பொய்கை மாட்டு சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், காளைகள், எருமைகள், கோழிகள், ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொய்கை மாட்டு சந்தையில் மாடுகள் வரத்தும், விற்பனையும் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று வழக்கம்போல் மாட்டுச்சந்தை கூடியது. இதில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என குறைவான அளவே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் ‘பொய்கை மாட்டு சந்தையில் இன்று(நேற்று) குறைந்த அளவில் மாடுகள் வரத்து காணப்பட்டது. மாவட்டத்தின் முக்கியமான வேலங்காடு, குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாக்கள் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதனால் வீட்டில் உள்ள மாடுகளை விற்பனைக்கு அழைத்து வரவில்லை. கோடை வெயில் முடிந்து, ஜூன் மாதம் முதல் வியாபாரம் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று(நேற்று) நடந்த மாட்டுச்சந்தையில், மாடுகள் வாங்க விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. சுமார் ரூ.50 லட்சத்துக்கும் குறைவாகத்தான் வியாபாரம் நடந்தது’ என்றனர்.

Related Stories: