சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா?

சென்னை: நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதியுள்ள சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்னும் வெளியிடவில்லை. சிபிஎஸ்இ கட்டுப்பாடு மற்றும் அதன் பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவி 17ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரையில் நடந்தது.

இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 552 பேர் மாணவர். 8 லட்சத்து 31 ஆயிரத்து 999 பேர் மாணவியர். இந்த ஆண்டு டிஜிட்டல் முறையின் கீழ் விடைத்தாள் திருத்தும் ஆன் ஸ்கிரீனிங் சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை ஆசிரியர்கள் நகல் எடுத்து திருத்தி ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் மதிப்பெண் போடுவார்கள்.

இதன் காரணமாக கால தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மே 12 அல்லது 13ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வில் அறிவியல், வணிகம், கலை என்று 3 பிரிவுகளில் பாடத்திட்டம் வைக்கப்பட்டுள்ளதால் அறிவில் பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.

அதே நேரத்தில் செய்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் அல்லது அக மதிப்பீடுகள் உள்ள பாடங்களில் குறைந்த பட்ச மதிப்பெண்கள் எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும்.  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி வீதம் 88.39 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் தேர்வு முடிவுகளை results.cbse.nic.in என்ற இணைய தளத்தில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: