யாருக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத நீட் தேர்வை ஒன்றிய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: யாருக்கும், எந்த வகையிலும் பயனளிக்காத நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்துகின்றனர். பல இடங்களில் மாணவிகள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கூனிக் குறுக வேண்டியுள்ளது. தேவையே இல்லாமல் இத்தகைய சோதனைகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையால் தேர்வுக்கான வினாக்களை பாதுகாத்து வைக்க முடியாதா? அவ்வாறு பாதுகாக்க முடியவில்லை என்றால் எதற்காக நீட் தேர்வை நடத்த வேண்டும்?. நீட் தேர்வை ஒன்றிய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு கொண்டு வந்ததோ அதன் இலக்கு எட்டப்பட்டதற்கான எந்தவித ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. வட மாநிலங்களில் தொடர்ந்து நீட் தேர்வு குளறுபடிகள் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன. எந்த குறைபாடும் இல்லாமல் தேர்வுகளை நடத்த ஒன்றிய அரசால் இயலவில்லை என்பதும் இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது மாணவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். மருத்துவத்துறையில் நீட் தேர்வினால் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதை ஒன்றிய அரசு வெளிப்படையாக ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும். மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: நீட் தேர்வுகளை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து விட்டனர். மிகப் பெரிய மோசடி வலைப்பின்னல் நீட் தேர்வை சுற்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது. நீதித்துறை மேற்பார்வையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு இந்த மோசடிக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: