×

பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியுள்ளதால் தங்கம் வாங்கும் உரிமையில் ‘கை’ வைத்த பிரதமர் மோடி: 50 லட்சம் பேர் வேலையிழப்பு; தங்கம் கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டை மக்கள் மீது சுமத்தத் தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி கூறியுள்ளதால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒன்றிய பாஜக அரசின் கீழ் கடந்த 2025-26ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. குறிப்பாகத் தங்கம் இறக்குமதி இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 சதவீதம் உயர்ந்து 71.98 பில்லியன் டாலரைத் தொட்டது. இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 333.2 பில்லியன் டாலராக அதிகரித்து, நிதி நெருக்கடி முற்றியது. இந்த நிர்வாகத் தோல்விகளை மறைக்க, தெலங்கானாவில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘பொருளாதார தேசப்பற்று’ என்ற பெயரில் ‘மக்கள் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது

தோல்வியைத் திசைதிருப்பத் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக மக்கள் தங்கம் வாங்கும் கலாசார உரிமையைப் பறிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் பங்களிப்பு வழங்கும் நகை மற்றும் ரத்தினத் தொழில் துறையை முடக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் இத்துறையில் பணியாற்றி வரும் நிலையில், ‘ஓராண்டு தங்கம் வாங்க வேண்டாம்’ என்ற மோடியின் பேச்சால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டின் திருமண சீசனில் நகை விற்பனை 40 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் எனத் தெரிகிறது. சிறு நகை வியாபாரிகள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, அவர்களைப் பழைய நகைகளை உருக்கிப் பிழைப்பு நடத்துமாறு தள்ளும் இந்த வியூகம், நகை தொழில் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

ஒன்றிய அரசின் தவறான முடிவுகளால் தட்டுப்பாடு ஏற்பட்டு, தற்போது 10 கிராம் தங்கம் விலை 1,56,000 ரூபாயாக உயர்ந்து நடுத்தர மக்களின் எட்டாக்கனியாக மாறியுள்ளது. வங்கிகள் மூலம் இறக்குமதி செய்வதில் ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளால், சர்வதேச விலையை விட உள்நாட்டில் மக்கள் கூடுதல் பணம் செலுத்தி வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு கூறுவது, கள்ளச்சந்தை மற்றும் கடத்தல் சம்பவங்களையே அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். முறையான விநியோகத்தை முடக்குவதால் ஹவாலா போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் பெருகி, அதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும் அபாயத்தை உணராமல் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

மக்களின் கடின உழைப்பால் சேர்த்த சேமிப்பைத் தங்கமாக வைத்திருக்க விடாமல், அதை அரசு வழங்கும் பத்திரங்களில் முதலீடு செய்யச் சொல்வது மக்களின் சொத்தைப் பறிக்கும் செயலாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசு, அதனால் ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்க வழியில்லாமல் தங்கம் மீது பழி போடுகிறது. ரிசர்வ் வங்கியிடம் உள்ள 700 பில்லியன் டாலர் கையிருப்பைச் சரியாக மேலாண்மை செய்யத் தெரியாத ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றுகிறது. ஒட்டுமொத்தமாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கத் தெரியாமல் மக்களின் தனிப்பட்ட ஆசைகளையும், உரிமைகளையும் முடக்குவது பாஜக அரசின் படுதோல்வியையே பறைசாற்றுகிறது என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

இருந்தும் மோடியின் இந்த நோக்கம் குறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை காக்க வேண்டும். சர்வதேச எரிபொருள் விலையேற்றத்தால் ரூபாயின் மதிப்பு அழுத்தத்தைச் சந்திக்கும் வேளையில், தங்கம் போன்ற அவசியமற்ற இறக்குமதிகளைக் குறைப்பதன் மூலம் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள 700 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பைச் செலவிடாமல் ரூபாயைக் காக்க மோடியின் இந்த வியூகம் உதவும். இதன் மூலம் பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி எடுத்து வருகிறது’ என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகுதியை இழந்த பிரதமர்: ராகுல் பிரதமரின் நேற்றைய உரைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெட்ரோல் மற்றும் தங்கம் வாங்க வேண்டாம் என மக்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது பிரதமரின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. தனது 12 ஆண்டு கால ஆட்சியில் எதை வாங்க வேண்டும், மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடும் நிலைக்கு நாட்டை பிரதமர் தள்ளியுள்ளார். தனது பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் மீது பழியை சுமத்துவது வெட்கக்கேடானது. நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்’ என்று விமர்சித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் பிரதமரின் இந்த பேச்சு நாட்டின் பொருளாதார பேரழிவிற்கு சான்றாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முறையான வியூகம் வகுக்காமல் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Tags : Modi ,India ,New Delhi ,BJP government ,
× RELATED பிரதமர் மோடி பயணித்த சாலையில்...