சோம்நாத்: குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இன்றைய நாள்(மே 11) மற்றொரு காரணத்திற்காகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால்1998 மே 11 அன்று தான் இந்தியா பொக்ரானில் அணு சோதனைகளை நடத்தியது. நமது விஞ்ஞானிகள் நம் நாட்டின் திறனையும் ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்தினர்.
இது உலகளவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் அனைத்து சக்திகளும் இந்தியாவைத் தடுக்க முன்வந்து பல கட்டுப்பாடுகளை விதித்தன. இந்தியாவை பொருளாதார ரீதியாகத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். ஆனாலும் கூட அடுத்த இரண்டே நாட்களில் மே 13 அன்று, மேலும் இரண்டு அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, இந்தியாவின் அரசியல் உறுதிப்பாடு யாராலும் அசைக்க முடியாதது என்பதை உலகம் அறிந்துகொண்டது. எப்போதும் நாடு மட்டுமே முதன்மையானது என்பதை பாஜக அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது. உலகின் எந்தவொரு சக்தியாலும் இந்தியாவை ஒடுக்கவோ, அல்லது அழுத்தத்தின் காரணமாக இந்நாடு பணிந்துபோகும்படி கட்டாயப்படுத்தவோ முடியாது என்றார்.
மேலும் வல்லரசு நாடுகளின் அழுத்தங்கள் இருந்த போதிலும், அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை நம் நாட்டின் உறுதிப்பாடு பிரதிபலித்ததாக குறிப்பிட்டார் உலகில் எந்த சக்தியாலும் நம் நாட்டை பணிய வைக்க முடியாது. தேச நலனே முதன்மையானதாக இருக்கும் போது, எந்த அழுத்தமும் நமது உறுதியை அசைக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.
