- அரியானா
- மகாராஷ்டிரா
- பீகார்
- மேற்கு வங்கம்
- அசாம்
- பாஜக
- புது தில்லி
- தேசிய ஜனநாயக கூட்டணி
- என்.டி.பி
- 2024
- லோக் தேர்தல்
புதுடெல்லி:பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற அபார வெற்றியின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்தாலும், பாஜகவின் தனிப்பட்ட பலம் 303ல் இருந்து 240 ஆக சரிந்தது. இதனால் ஆட்சி நீடிக்காது என்றும், கூட்டணி கட்சிகளின் தயவில்தான் ஒன்றிய அரசு இயங்குகிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. குறிப்பாக, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பாஜகவுக்கு ஊன்றுகோலாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக, வரும் 2027ம் ஆண்டு நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்கள் அரசியல் களத்தை தலைகீழாக மாற்றியுள்ளன. அரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களிலும் கூட்டணி பலம் பலமடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 288 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 150ல் இருந்து 237 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் கூட்டணியின் பலம் 125ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்தில் தேர்தல் நடந்த மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அங்குள்ள 294 இடங்களில் இதற்கு முன்பு வெறும் 77 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, தற்போது மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி 207 எம்.எல்.ஏ.,க்களுடன் பலமான நிலையில் உள்ளது. இந்த இமாலய வெற்றி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிக்க பாஜகவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். கடந்த 2022ம் ஆண்டு கணக்கீட்டின்படி, ஒரு எம்.பி.,யின் வாக்கு மதிப்பு 700 ஆக இருந்தது. ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த வாக்கு மதிப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. சிக்கிம் மாநில எம்.எல்.ஏ.,வின் வாக்கு மதிப்பு வெறும் 7 ஆக இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநில எம்.எல்.ஏ.,வின் வாக்கு மதிப்பு 208 ஆக உள்ளது. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலைத் தீர்மானிப்பதில் உத்தரப் பிரதேச மாநிலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்குள்ள எம்.எல்.ஏ.,க்களின் மொத்த வாக்கு மதிப்பு மட்டும் 83,800க்கும் அதிகமாகும். அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ஆதரவு பாஜகவுக்குப் பக்கபலமாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட சரிவால் சுமார் 44,100 வாக்குகள் குறைந்தாலும், தற்போது சில மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றியால் அந்த இழப்பு ஈடுகட்டப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் பாஜகவின் பலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தவிர, 2018ம் ஆண்டுக்குப் பிறகு கலைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றம் தற்போது செயல்பாட்டில் உள்ளதால், அந்த மாநில எம்.எல்.ஏ.,க்களும் இம்முறை வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள். இருப்பினும், இது சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. மாநிலங்களில் கிடைத்துள்ள தொடர் வெற்றிகளால், குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்வதில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எவ்வித சிக்கலும் இருக்காது.
மொத்தம் 10,86,431 வாக்குகள் கொண்ட தேர்தல் குழுவில், தற்போதுள்ள நிலவரப்படி பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகவும் அதிகமான நிலையில் வாக்குகளை வைத்துள்ளன. மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டிருந்தால் மட்டுமே, கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளுக்கு பாஜக பணிய வேண்டிய சூழல் இருந்திருக்கும். ஆனால் தற்போது கிடைத்துள்ள இந்த வியூகம் சார்ந்த வெற்றிகள், கூட்டணி கட்சிகளின் தயவின்றி குடியரசுத் தலைவர் தேர்தலை பாஜக தனது விருப்பப்படி கையாள வழிவகை செய்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
